'சியாவ்மி எம்ஐ3' (Xiaomi Mi3) என்ற சீனாவின் புதிய ரக ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பில், பிரபல ஆன்லைன் வர்த்தக இணையதளமான 'ஃபிளிப்கார்ட்' சேவை சிறிது நேரம் முடங்கியது.
கடந்த 15-ஆம் தேதி, 'சியாவ்மி என்ற ரக செல்பேசி இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. இதனால், 'ஃபிளிப்கார்ட்' நிறுவனத்தின் இணையதள சேவை செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் தடைபட்டது. அதேவேளையில், விற்பனைக்கு வந்த 39 நிமிடத்திலேயே, Mi 3 ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
ஃபிளிப்கார்ட்டில் செவ்வாய்க்கிழமை மதியம் ஆன்லைனில் வாங்க முற்பட்டோருக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, பலரின் ஆர்டர்கள் முழுமையடையாமல் பாதியில் சேவை தடைப்பட்டது.
இதற்குமுன், MotoG மற்றும் MotoE ரக போன்கள் விற்பனைக்கு வந்தபோது, இதே போன்ற சிக்கல் ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
'ஃபிளிப்கார்ட்' டின் தகவல்படி, ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை, 1,00,000 போன்களை வாங்குவதற்காக இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "புதிய ரக போன் பதிவு செய்யப்பட்டபோது, எங்களின் இணையதளத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஆனால், நாங்கள் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுத்து சரி செய்தோம். அந்த போன் விற்பனைக்கு வந்தவுடன், ஒரேசமயத்தில் பலர் எங்கள் இணையதளத்தில் 'லாக் இன்' செய்ததே இந்த திடீர் நெரிசலுக்கு காரணம்" என்று தெரிவித்தார்.
கூகுளின் நெக்ஸஸ் (Nexus) என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட 'சியாவ்மி எம்ஐ3' ரூ.13,999 விலைக்கு 'ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டது.
"இந்த வகை ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இதனை சரிசெய்ய நாங்கள் நடிவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்று சீன ஸ்மார்ட்பொன் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி மனு ஜெயின் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மேலும், நாங்கள் 'ஃபிளிப்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப ரிதியான சிக்கல்களை சரிசெய்வதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சேவை தடைப்பட்டபோது போன் வாங்க முற்பட்டவர்களுக்கு அடுத்த விற்பனை நாளான 29-ஆம் தேதி தானாக பதிவு செய்யப்படும்" என்றார் அவர்.


0 comments:
கருத்துரையிடுக