தமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி-92, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்-54, அரசு உதவி பெறும் பள்ளிகள்-29, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்-10, மாதிரி பள்ளிகள்-2, சுயநிதிப் பள்ளிகள்-3, சமூக நலத்துறை பள்ளி-1 என மொத்தம் 192 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு பள்ளியைத் தவிர மற்ற 191 பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் 12 ஆயிரத்து 989 மாணவர்கள், 15 ஆயிரத்து 302 மாணவியர் என மொத்தம் 28 ஆயிரத்து 291 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வரும் அதே வேளையில், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்பதில் ஆண்டுக்காண்டு மாணவியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்காண்டு சரிந்து வருகிறது. கடந்த 2006-07ம் ஆண்டு மாவட்டத்தில் மாணவர்களை விட 4 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினர். படிப்படியாக உயர்ந்து கடந்தாண்டு 1,400 ஆக அதிகரிந்து இந்தாண்டு 2,322 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், மாவட்டத்தின் மக்கள் தொகை
(கடந்த 2011ம் ஆண்டின் கணக்கின்படி) 26 லட்சத்து 5,914 பேர். அதில், ஆண்கள் 13 லட்சத்து 11 ஆயிரத்து 697 பேர். பெண்கள் 12 லட்சத்து 94 ஆயிரத்து 217 பேர். அதாவது ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்களும், குழந்தைகளில் 1000 ஆணிற்கு 896 பெண்களே உள்ளன. மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தும், பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதே வேளையில், பள்ளி சேர்க்கை மற்றும் பொதுத் தேர்வுகளில் பங்கேற்பதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். இது ஆண்கள் மத்தியில் கல்வி கற்பதில் ஆர்வம் குறைந்து, பல்வேறு வழிகளில் தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொள்வதையே காட்டுகிறது. இதன் காரணமாகவே, மிக பழமையான கடலூர் மாவட்டம், இன்னமும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளது. இந்த நிலையை மாற்றிட, அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments:
கருத்துரையிடுக