வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

பல்கலைகள், கல்லுாரிகளில் அழகிப் போட்டி: தடை விதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், அழகிப் போட்டி நடத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும் என, தமிழக உயர் கல்வித்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 2013ல் கல்லுாரிகளுக்கு இடையேயான, டெக்கோ பெஸ் 13 என்ற கலாசார விழா நடத்தப்பட்டது. இதில், தென் மாநிலங்கள் அளவில் 400 கல்லுாரிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பி.இ., படிக்கும் என் மகள் அக்ஷயாவும் இந்த விழாவில், பல போட்டிகளில் பங்கேற்றார். அழகிப் போட்டியில், மிஸ் எக்கோ பெஸ் 13 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டர், ஆன்ட்ராய்டு மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்பரிசுகள் என் மகளுக்கு வழங்கப்படவில்லை; சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது. அதிலும், உரியவரின் கையெழுத்து இல்லை. விழா குழுவினரிடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. வழக்கறிஞர் மூலம், நோட்டீஸ் அனுப்பியும், பதில் தெரிவிக்கவில்லை.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். என் மகளுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில், அழகுப் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு, நீதிபதி சிவஞானம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மயிலை சத்யா ஆஜராகினார்.
நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் போட்டியில் வெற்றி பெற்றும், அறிவித்தபடி பரிசுகள் வழங்கவில்லை. கல்லுாரி விழாக்களில், மாணவர் திறமைகளை வளர்க்கும் போட்டிகளை வைக்கலாம்.

கல்லுாரிகளுக்கு இடையேயான கலாசார விழாவில், அழகன், அழகி, ஒய்யார நடை போட்டி நடத்துவதால், இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களுக்கு பயன் ஏதும் இருக்குமா என, கேள்வி எழுகிறது. பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது, அதற்கான வழிமுறை மற்றும் கண்காணிப்பு அவசியம் இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், அழகன் - அழகி போட்டி நடத்தக் கூடாது என, தமிழக உயர்கல்வி துறை செயலர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற, மனுதாரரின் மகளுக்கான பரிசுத் தொகை குறித்து, அண்ணா பல்கலைக்கழகம் வரும், 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்