வியாழன், 19 பிப்ரவரி, 2015

மூடு விழா காணும் சத்துணவு மையங்கள் ! தினகரன் தலையங்கம்

உணவில்லாமல் வாடியதால் கல்வி பயில வரஇயலாத குழந்தைகளை பள்ளிகளுக்கு வரவழைக்க கொண்டுவரப்பட்டதுதான் சத்துணவு திட்டம். காமராஜர் ஆட்சி காலத் தில் அறிமுகமான இந்த திட்டம், அடுத்தடுத்த ஆட்சிகளால் மெருகேற்றப்பட்டு இன்றைக்கும் வெற்றிகரமாக தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்படுகிறது. சத்துணவு திட்டத்தால் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது. இதேபோல் பள்ளி படிப்பை இடையில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இப்படி இந்தியா முழுமைக்கும் தமிழக மதிய உணவு திட்டம் முன்னோடியாக, வழிகாட்டியாக, தூண்டுகோலாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 68 லட்சம் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 42,619 மையங்கள் அமைக்கப்பட்டு வாரம் 5 நாட்கள் குழந்தைகளுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. சமூக நல திட்டங்களுக்கெல்லாம் மணி மகுடமாக இருக்கும் இந்த திட்டத்துக்கு சத்தமில்லாமல் மூடுவிழா நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான மோசமான தொடக்கம் நெல்லையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது சத்துணவு திட்டத்தை அரசே சீர்குலைக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுத்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டிருப்பதே இந்த கேள்விக்கு காரணம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களை மூடி அருகில் உள்ள சத்துணவு மையத்துடன் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பக்கத்து மையத்துக்கு தினமும் சென்று சமைத்த உணவை எடுத்து வர வேண்டிய நிலை. அதற்கு ஆகும் போக்குவரத்து செலவை யார் தருவார்கள் என்ற கேள்விக்கு அந்த சுற்றறிக்கையில் விடை இல்லை. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு எடுத்துச் செல்வதன் மூலம் அந்த உணவு ஆறிப்போய் மாணவர்களால் சாப்பிட முடியாமல்போக வாய்ப்பு உள்ளது. இப்படி மூட வேண்டிய சத்துணவு மையங்கள் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 300 இருக்கிறதாம். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால் இப்படி மூடப்படும் மையங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தொடும். வீட்டுக்கு அருகிலேயே பள்ளியில் சுடச்சுட மதிய உணவு கிடைக்கிறதே என்று பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலர் இருக்க, இனி ஆறிப்போன உணவு அவர்களது பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் அபாயம் உள்ளது. இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டதா என்பது தெரியவில்லை. சிக்கனம் என்ற பெயரில் இப்படி ஒரு விஷப்பரீட்சையில் அரசு இறங்கி உள்ளது ஆபத்தானது. ஏற்கனவே, பல இடங்களில் பள்ளி விளையாட்டு மைதானங்கள் அரசு அலுவலக கட்டிடம் கட்ட தாரை வார்க்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்து பள்ளியை மூடுவதற்காக இப்படி ஒரு நடவடிக்கையில் அரசு இறங்கி இருக்கலாம் என்ற அச்சமும் எழுகிறது. இப்படியே சென்றால், பள்ளிக் கல்வி முழுவதும் தனியார் மயமாகும். ஏழை, பாழைகள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்தினருக்கும் பள்ளிக் கல்வி எட்டாக்கனியாகிவிடும். படிப்பறிவில்லாதவர்கள் எண்ணிக்கையில் நம்பர் ஒன் என்று கற்காலத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதா? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்