பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, நாளை துவங்கும் நிலையில், தனித்தேர்வர்கள், செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதியை, தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்., 10ம் தேதி முடிகிறது. முன்னதாக, அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, நாளை துவங்கி மார்ச் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 142 தேர்வு மையங்களில், 57 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது.
அதை தொடர்ந்து, தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில், 300 பேரும்; செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம் குருகுலம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் சேவாசதன் அரசு மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய எட்டு பள்ளிகளில், 808 என, 1,108 தனித்தேர்வர்கள் செய்முறைத் தேர்வு பயிற்சி பெற்றனர்.
இந்த பள்ளிகளில், தங்களுக்கான செய்முறைத் தேர்வு எப்போது துவங்கவுள்ளது என, பள்ளி நிர்வாகத்திடம் கேட்டு, தனித்தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என, மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக