மாணவர்கள் பிட் அடித்ததால் வேலூரில் 30 ஆசிரியர்கள் தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு: கல்வி அதிகாரிகள் நடவடிக்கை
வேலூர், மார்ச்.27–பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு அறையில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைதொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தும் முறைகளில் கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18–ந்தேதி கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வின் போது வேலூர் மாவட்டத்தில் ஒரு சில தேர்வு மையங்களில் மாணவர்கள் மறைத்து வைத்திருந்த பிட் சிக்கியது. இதுகுறித்து தேர்வு மைய பள்ளி கண்காணிப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து தேர்வு நடக்கும் போது முறையாக பணி செய்யாமல் இருந்ததாகவும், கவன குறைவாக ஆசிரியர்கள் நடந்து கொண்டதாகவும் கூறி பிட் சிக்கிய தேர்வு அறையில் பணியில் இருந்த 30 ஆசிரியர்களை தேர்வு பணியில் இருந்து விடுவித்து வேலூர் முதன்மை கல்வி அலுவலர் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பிளஸ்–2 தேர்வில் காப்பியடித்ததாக 23 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அந்த தேர்வு எழுதிய மையத்தின் கண்காணிப்பாளர்கள் 18 பேருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னையா விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளார்.
மாணவர்கள் பிட் அடித்த விவகாரத்தில் வேலூர் ஆசிரியர்கள் 30 பேர் விடுவிக்கப்பட்டதும் திருவண்ணாமலையில் 18 கண்காணிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்ட சம்பவமும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வேலூர் முதன்மை கல்வி அலுவலர் குமாரிடம் கேட்ட போது:– மாணவர்களிடம் பிட் பிடிபட்ட போது பணியில் இருந்த ஆசிரியர்களை தேர்வு பணியில் இருந்து விடுவித்துள்ளோம்.
விடைத்தாள் திருத்தும் முதுகலை ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

0 comments:
கருத்துரையிடுக