ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி தீ விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 450 சிலிண்டர்களும் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து நந்திகொத்கூர் என்ற இடத்துக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியில் 450 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன.
கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எணுகு மரி என்ற இடத்தில் லாரி செல்லும் போது தீப்பற்றியது. தீயை அணைக்க டிரைவர் குலாயப்பா முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
உடனே அவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். அதற்குள் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அதில் இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சிலிண்டர்கள் பறந்து வந்து விழுந்தன. இதனால் அருகில் இருந்த கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சில இளைஞர்கள் அந்த சாலையில் வந்த வாகனங்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்தினர்.அதனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
பயங்கர வெடிச்சத்தத்தோடு சுமார் 1 மணி நேரம் லாரி எரிந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்டது. இதனால் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

0 comments:
கருத்துரையிடுக