தேனியில் பிளஸ் 2 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள பள்ளியில் திங்கள்கிழமை, பிளஸ் 2 தேர்வின் போது விடைக் குறிப்பை மறைத்து வைத்திருந்ததாக ஒரு தனித் தேர்வர் உள்பட 3 மாணவர்கள் பறக்கும் படையினரால் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தேர்வறைகளில் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய 3 ஆசிரியர்கள் மாவட்ட கல்வித் துறையால் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி முன், விடைத் தாள் திருத்தும் பணியை புறக்கணித்து 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.வாசு, ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின், ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு விடைத் தாள் திருத்தும் பணிக்குச் சென்றனர்.

0 comments:
கருத்துரையிடுக