"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் - அதில் இரண்டு குளம் பாழ் - ஒன்றில் தண்ணீரே இல்லை” - என்ற வாய் ஜாலத்திலே உள்ள ஏமாற்று வித்தையைப் போலத் தான் உள்ளது.
2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை அ.தி.மு.க. அரசின் சார்பாக இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், கடந்த இரண்டு மூன்று மாத காலமாகவே தமிழக அரசின் நிதி நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைப் பற்றி நாளேடுகளில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.
நாளிதழ்கள் வெளியிடுவது ஒரு புறம் இருக்க; தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “தமிழ்நாடு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கி யுள்ளது” என்று தெரிவித்திருப்பது, ஏடுகளில் வருவது உண்மை தான் என்பதற்கு ஒப்புதல் அளிப்பதாகவே அமைந்திருக்கிறது.
இதையும் உறுதிப்படுத்துவதைப் போல இன்றைய நிதி நிலை அறிக்கையின் தொடக்கத்திலேயே “கடந்த ஆண்டிலிருந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை” என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
மாநிலங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மத்திய அரசின் எட்டு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்றும்; மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி வருங்காலத்தில் கிடைக்காது என்றும்; மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21,116 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்றும்; நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக் கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை என்றும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த போது தமிழக முதலமைச்சர் அவரைச் சந்தித்து இந்தக் குறைகளைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா? அல்லது மத்திய நிதியமைச்சர் அ.தி.மு.க. வின் தலைவியை அவரது இல்லத்திலே சந்தித்த போது உடன் இருந்து இந்தக் கோரிக்கைகளையெல்லாம் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்? தமிழக அரசின் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு விடை கிடைக்குமென்று நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தார்கள். குறிப்பாக ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் பருப்பு வகைகள் முறையாக வழங்கப்படவில்லை என்ற குறை இருக்கிறது. ஆனால் நிதி நிலை அறிக்கையிலே பருப்பு வகைகளின் சந்தை விலை உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ரேஷன் கடைகளில் முறையாக அவை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எந்த விளக்கமும் இல்லை.

0 comments:
கருத்துரையிடுக