சென்னை: சத்துணவுப் பணியாளர்களின் 34 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு
ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும்
சத்துணவுப் பணியாளர்கள் தங்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும்; பணி
நிலைப்பு, ஓய்வூதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34
கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கி
உள்ளனர். இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது
கண்டிக்கத்தக்கது.
எந்த நேரமும் உயிர் பறிக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் வாழ்வது எவ்வளவு
கொடுமையானதோ, அதவிடக் கொடுமையானது எந்த நேரம் வேலை பறிக்கப்படுமோ என்ற
அச்சத்துடன் நிச்சயமற்ற நிலையில் ஒரு வேலையை செய்வது ஆகும்.
இந்தக் கொடுமையைத் தான் தமிழகத்திலுள்ள சத்துணவு பணியாளர்கள் 30
ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள
கோரிக்கைகள் நியாயமானவை. காலம் காலமாக பணியாற்றி வரும் தங்களை முழு நேர
ஊழியராக்கி அதற்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அதிக பணிக்கொடை
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை அல்ல.
ஆனால், அரசு ஊழியர் நலன் காப்பதாகக் பெருமை பேசும் அ.தி.மு.க.வும்,
தி.மு.க.வும் இவர்களை தங்களின் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்
கொள்கின்றனவே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற 30 ஆண்டுகளாக எதையும்
செய்யவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தை முற்றுமையிடும் போராட்டம் நடத்திய
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு
காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது அப்போதைய தி.மு.க அரசு.
அப்போது,‘‘ எம்.ஜி.ஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால் தான்
சத்துணவுப் பணியாளர்களை தி.மு.க. அரசு பழிவாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சி
மீண்டும் இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்'' என்று
ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள்
முடியுயும் நிலையில் அவர்களின் ஒரு கோரிக்கைக் கூட நிறைவேற்றப்படவில்லை.
சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்திய
அமைச்சர்கள் துறை மாற்றமோ அல்லது பதவி நீக்கமோ செய்யப்பட்டார்களே தவிர
கோரிக்கைகளை நிறைவேற்ற இப்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
சத்துணவுப் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 மணி நேரம் வரை
மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை முழுநேர ஊழியர்களாக அறிவிக்க
முடியாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான வாதம்
ஆகும்.
சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகமிக குறைவாகும்.
சத்துணவு அமைப்பாளருக்கு மாதம் ரூபாய் 3500, சமையலருக்கு ரூபாய் 2500,
உதவியாளருக்கு ரூபாய் 1800 என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
தினமும் 32 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
வாழ்பவர்கள் என்ற மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வரையறையின்படி
பார்த்தாலும், ஒரு சத்துணவுப் பணியாளரின் குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக
வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ் தான்
இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையை ஒழிப்பது தான் அரசின் கடமை என்ற நிலையில், அரசே சத்துணவுப்
பணியாளர்கர் குடும்பங்களை வறுமையில் தள்ளுவது சரியாக இருக்குமா? என்பதை
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்போதும் கூட சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப்
பதிலாக அவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தமிழக அரசு எச்சரிப்பது அதன்
சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இப்போக்கை விடுத்து சத்துணவுப்
பணியாளர்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து, நிறைவேற்றி அவர்களின்
வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று
தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக