சேலம்: தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார்
எழுந்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 10ம் வகுப்பு விடைத்தாள்
திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் முடிவு செய்துள்ளனர்.
நிர்வாக மாறுதல்:
கல்வியாண்டு துவங்கும் முன், பொது இடமாறுதல் கலந்தாய்வு நடப்பது
வழக்கம். பொதுமாறுதலுக்கு பின், அவ்வப்போது, ஒன்றிரண்டு, 'நிர்வாக மாறுதல்'
என, ஒரு சிலர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, பணியிட மாறுதல் உத்தரவு
பெற்று வருவர். ஆனால், சமீப காலமாக, பொதுமாறுதலில் பங்கேற்கும் ஆசிரியர்
எண்ணிக்கையை விட, நிர்வாக மாறுதல் பெறும் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கும்
அளவுக்கு, அதிகரித்தது. இதற்காக, ஆசிரியர், பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து
வந்தனர்.
செயலர் தடை விதிப்பு:
இந்நிலையில், தேர்வு சமயத்தில், ஆசிரியர் இட மாறுதல் உத்தரவு பெற்றால்,
மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், மூன்று மாதங்களுக்கு முன்,
கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, நிர்வாக மாறுதல்களுக்கு தடை
விதித்தார். ஆனால், தேர்வு நடந்த நேரத்தில், சென்னையில் மட்டும், 76
ஆசிரியர்களுக்கு, நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக புகார்
எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி, வழங்கிய இந்த நிர்வாக இடமாறுதல்களை ரத்து
செய்யக்கோரி, தமிழ்நாடு, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்
கழகம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
ஒளிவு மறைவற்ற...:
இதுகுறித்து,
சங்கத்தின் பொதுச் செயலர், கோவிந்தன் கூறியதாவது: ஒளிவு, மறைவற்ற
இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை புறந்தள்ளும்
விதமாக, சென்னையில், 76 பேருக்கு, தேர்வு சமயத்தில், இடமாறுதல் உத்தரவுகள்
வழங்கப்பட்டு உள்ளன. இதை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள்,
'பிட்' அடித்தால், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற
உத்தரவை நீக்கவும், 'சஸ்பெண்ட்' ஆன கண்காணிப்பாளர்களை பணியில் சேர்க்கவும்,
நடவடிக்கை தேவை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 23ம் தேதி காலை,
8:30 மணியில் இருந்து, 9:30 மணி வரை, விடைத்தாள் திருத்தும் பணியை
புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக