பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், 1.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்தது.
எனவே எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்ததால், விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி மே 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் சுமார் 1.09 லட்சம் மாணவர்கள் விடைத்தாள் நகல் (scan copy) கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரி 1880 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 87 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக