திங்கள், 11 மே, 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.
 
 
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பாக விசாரணை தொடங்கியது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நால்வர் தரப்பு வாதமும் நிறைவடைந்தது.

45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ஆம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார்.

இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானிசிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஏப்ரல் 27ஆஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுதும் பணியைத் தொடங்கினார். இந்நிலையில், தீர்ப்பு எழுதும் பணிகள் முடிவடைந்த நிலையில் மே 11ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவினர் தொடர்ந்து குவிந்ததால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார். அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச் செல்வன் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும் வந்தனர். இதனிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
விடுதலை 

இதனைத் தொடர்ந்து சரியாக 11 மணிக்கு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி , ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அபராதமும் ரத்து 

பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் ரத்து செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார். 

3 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை மட்டும் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார். தீர்ப்பு மொத்தம் 900 பக்கங்கள் கொண்டதாக உள்ளதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்