பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம்
தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அதிகாரிகள் ஆர்வமின்மையால் கேள்விக்குறியாகி வருகிறது.
தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு, 25 சதவீதம் வரை சீட் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு, கடந்த சில ஆண்டுக்கு முன் உத்தரவிட்டது. இம்முறையை அமல்படுத்தினால், வசதி படைத்தவர்களின் குழந்தைகளை சேர்ப்பது கேள்விக்குறியாகும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 528 மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகளும், கல்வி துறை அதிகாரிகளும், இதை மதிப்பதில்லை.ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக சதவீதம் மதிப்பெண் பெற செய்வது, தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான போக்கை, அதிகாரிகள் கடைபிடிக்கின்றனர்.
கடந்தாண்டு இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, அப்பள்ளியில் இக்கல்வி ஆண்டிலும் தொடர விரும்புவோர் எண்ணிக்கை, அல்லது, சேர்க்க மறுத்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூற, கல்வி துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். "மாறாக ஏழை, எளிய மாணவ, மாணவியர், அரசு பள்ளிகளில் சேரலாம். தனியார் பள்ளிகளுக்கு இணையான பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது' என்பதையே விளம்பரப்படுத்துகின்றனர். தனியார் பள்ளியில், தமிழக அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர விரும்புவோர், தனது விண்ணப்பங்களை, மே 4 முதல் சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது, பள்ளி கல்வி துறையின் அனைத்து அலுவலகங்களிலும் பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்தது.ஆனால், ஈரோடு மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தனியார் பள்ளிகளில், பெரும்பாலான பெற்றோர்கள், கடனை வாங்கி, பீஸ் கட்டி படிக்க வைக்கின்றனர். கல்வித்துறை உதவினால், இவர்கள் பயன்பெறுவர்.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: கடந்த, 4 முதல், 19ம் தேதி வரை தனியார் பள்ளிகளில், 25 சதவீகித அடிப்படையில், குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மட்டுமின்றி, பள்ளி கல்வி துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். இது தொடர்பான பேனர், மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் வைக்க உள்ளோம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் சமர்பிக்கலாம். சென்னையில் இருந்து உத்தரவு வந்த பின்னர், பேனர் வைத்தல், விண்ணப்பம் வழங்குதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக