தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று (20.7.2015) நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. சட்டப் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற 7 அரசு சட்டக் கல்லூரிகள், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் செயல்பட்டுவரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்ட பட்டப்படிப்பும் மற்றும் வேலூர் தவிர்த்து உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. சட்ட பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 1,052 இடத்திற்கு 5,551 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் நிராகரிக்கப்பட்ட 186 விண்ணப்பங்கள் தவிர்த்து, 5,325 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் சட்டக்கல்வி சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருவதை உலகிற்கு பறை சாற்றுகிறது.
இங்கு வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில், பொதுப்பட்டியலின் கட்ஆப் 89.875 மதிப்பெண் என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. இது சட்டம் படிக்க விரும்பும் மாணவர்களின் சேர்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
சட்டக் கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு, சேர்க்கை ஆணை பெற்ற மற்றும் பெறவுள்ள, மாணவ, மாணவியர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து, சிறந்த நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாகவும் விளங்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உங்களை எல்லாம், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வணங்காமுடி, சட்டத்துறை அரசுச் செயலாளர் (பொறுப்பு) பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சட்டப்படிப்பு சேர்க்கைக் குழுவின் தலைவர், மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் சவுந்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

0 comments:
கருத்துரையிடுக