வியாழன், 9 ஜூலை, 2015

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரம் கவலையளிக்கிறது

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் கல்வி தரம் கவலையளிக்கிறது

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின்  கல்வித் தரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பது தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுபள்ளி மாணவ, மாணவியர் கல்வி கற்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில், சமச்சீர் கல்விமுறையை கொண்டுவந்தபோது அனைவரும் வரவேற்றனர். ஆனால், தற்போது பள்ளிக்கல்வித்துறையின் நடைமுறைகளை காணும் போது, கல்வியின் தரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதென்பது தெரிகிறது.
10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு மளமளவென அதிகரித்து, இந்த 2015ஆம் ஆண்டு 92.9 மற்றும் 90.6 சதவிகிதம் தேர்ச்சி என சொல்லப்பட்டுள்ளது. அப்படி தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி கற்கச் செல்லும் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளிலிருந்து மிக மிக குறைவான அளவே உயர் கல்விக்கு சென்றுள்ளனர்.
ஐஏஎஸ் தேர்வில் நாடு முழுவதும் 1236 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் 118 பேர் தேர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே சமயத்தில் இவர்கள் அனைவருமே கடந்த 10 வருடங்களுக்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த நான்கு வருடமாக பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம், பொறியாளர், பட்டயகணக்காளர் (CA) படிப்பிற்கு அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவுத்தேர்வில், தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வெழுதியும் 33 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்ககூடியதாகும். இதே நிலைதான் மருத்துவம் மற்றும் பட்டயகணக்காளர் (CA) படிப்பிற்கும் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்தான் இதுபோன்ற தேர்வுகளில் அதிகளவு தேர்ச்சி பெற்றதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. ஆனால் நம்மை விட பின்தங்கியுள்ள மாநிலங்களை சார்ந்தவர்கள் தற்போது அதிகளவில் தேர்வாகும்போது, மிகுந்த அறிவுத்திறனும், ஆற்றலும், உழைப்புமுள்ள தமிழக மாணவ, மாணவியரால் ஏன் தேர்ச்சி பெற முடியவில்லை?
இதற்கு முழுமுதற் காரணம் தமிழகப்பள்ளிகளில் கல்வியின்தரம், தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக இல்லை. குறிப்பாக 9, 10, +1, +2 ஆகிய வகுப்பு பாடத்திட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும் என்றும், தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது என கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.
எனவே. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் +2 வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும். சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்