அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உடல் இன்று ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், 20 தனியார் மய வங்கிகளும், 12 பிறநாட்டு சார் வங்கிகளும், 2 கிராம வங்கிகளும் செயல்படுகின்றன.
அப்துல்கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மேற்கண்ட வங்கிகள் மற்றும் இதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் இயங்காததால் எந்தவிதமான வங்கிப்பணிகளிலும் ஊழியர்கள் இன்று ஈடுபட மாட்டார்கள்.
வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஏ.டி.எம். சேவை எந்த விதத்திலும் பாதிப்படையாது. அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களிலும் குறிப்பிட்ட அளவுக்கு பணம் போடப்பட்டுள்ளது. எனவே விடுமுறை தினமான நாளை (இன்று) எந்த விதத்திலும் பணத்தட்டுப்பாடு என்பது இருக்காது. பொதுமக்கள் பாதிப்பு அடைய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக