பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம் பெற்றதால், அப்பகுதி நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள் முதல் இடைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகம் 2008ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டன. இதில் தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் தலைவராக இருந்த நாகநாதன் எழுதிய முகவுரையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி கூறியிருந்தார்.
அ.தி.மு.க., ஆட்சியில் பாடத்திட்டம் மாற்றப்படாததால் பழைய புத்தகம் அப்படியே அச்சடிக்கப்பட்டன. இதுதொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பின், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அப்புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டன. கருணாநிதி, தங்கம் தென்னரசு பெயர் இடம் பெற்ற முகவுரை பக்கம் நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டன.
ஆனால் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொருளியல் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 24ல் இடைத்தேர்வு துவங்குவதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் எவ்வாறு தேர்வு எழுதுவது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 15ல் வகுப்புகள் துவங்கின. தற்போது வரை அவர்களுக்கு முகவுரை நீக்கப்பட்ட பொருளியல் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஜூலை 24ல் இடைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வாறு அத்தேர்வை எழுதுவர். கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 comments:
கருத்துரையிடுக