2 மாதத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பதவியில் அடங்கிய ஆயிரத்து 241 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்றது. சுமார் 6 லட்சம்பேர் இத்தேர்வில் பங்கேற்றனர்.
தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பதவியில் அடங்கிய 8 வணிகவரி அதிகாரிகள், 18 இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள், 23 சார்பதிவாளர்கள், 618 வருவாய் உதவியாளர்கள், 333 கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட18 வகையான பதவிகளில் ஆயிரத்து 241 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்து 511 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். காலை10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் ஒரு மணி வரை தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 167 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுப்பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை சாந்தோமில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை டி.என்.பி.எஸ்.பி. பொறுப்பு தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திருமதி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. பாலசுப்பிரமணியன், டி.என்.பி.எஸ்.பி. தேர்வாணையம் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், சுகாதாரத்துறையின் மகப்பேறு நல அலுவலர் பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக