தமிழக காவல்துறையில், 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர்.
காவல்துறையில் ஆயிரத்து 78 ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த மே மாதம் 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த எழுத்துத் தேர்வு முடிவுகள், தேர்வாணைய இணையதளத்தில், கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, தகுதிபெற்றவர்களுக்கான உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 11 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது. நாளை மறுதினமும் உடற்கூறு தேர்வு நடைபெறவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 232 பேர் பங்கேற்கின்றனர்.
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற உதவி ஆய்வாளர் பணியிட உடற்கூறு தேர்வில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக