கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளி கடந்த 31-08-2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் வணிக வளாகத்திலும் பின்னர் வாடகை வீட்டிலும் பள்ளி இயங்கி வருகிறது. தற்போது பள்ளி யில் 26 மாணவர்கள், 14 மாணவிகள் என 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை யாசிரியராக ரோசலின்ஜெயந்தி, அன்புத்தாய் உள்ளார். மேலும், ஒரு ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிக்கு இடம் கிடைக்காமல் தொடர்ந்து வாடகை கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும், சத்துணவுக்கூடம் இல்லாததால், தலைமையா சிரியரின் வீட்டில் தினமும் சமையல் செய்து மாணவர்களுக்கு பரிமாறி வருகின் றனர். பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் நிலம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிக்கு சொந்தமாக கட்டிடம் இல்லாததால் இதுவரை 2 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் வருடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாடகை செலுத்தினர். அதன்பிறகு கடந்த 7 ஆண்டாக ஒவ்வொரு மாதமும் வாடகை கட்டிடத்திற்கு தலைமையாசிரியர் தனது ஊதியத்தில் இருந்து ரூ.5500 வாடகை செலுத்துகிறார். கடும் இடநெருக்கடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நிலம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முதல் அதிகாரிகள் வரை தொடர்ந்து மனு அளித்து வருகிறோம்.
பள்ளிக்காக இடம் தேர்வு செய்யும் போது, உள்ளாட்சி நிர்வாகிகளின் தலையீட்டால் தடைபட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி யில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூஜையும் போடப்பட்டது. ஆனால் அப்பகுதி கவுன்சிலர் எதிர்ப்பு தெரி வித்ததால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பாரதிதாசன் நகரில் பள்ளிக்குத் தேவையான 9 சென்ட் நிலம் அடையாளம் காணப் பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான தடையின்மை சான்று வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் கேட்டபோது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பள்ளிக்கு வாடகை செலுத்தும் தலைமை ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ் கூறியதாவது: ஓசூர் பாரதிதாசன் நகரில் பள்ளி தொடங்கும் போது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான இடவசதியை ஏற்படுத்தி தருகிறோம் என்கிற உறுதிமொழியுடன் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளிக்கான வாடகையை தலைமையாசிரியர் தான் செலுத்தி வருகிறார். மேலும், கண்டறியப்பட்டுள்ள நிலத்தினை பள்ளியின் பெயருக்கு பதிவு செய்து கட்டிட பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.


0 comments:
கருத்துரையிடுக