தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி வாகனங்களில், அவ்வப்போது விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவியர் பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலும் மெட்ரிக் பள்ளிகளே வேக கட்டுப்பாட்டு கருவிகளை தற்போது பொருத்தியுள்ளன. தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்று இயங்கும் சி.பி.எஸ்.இ., பள்ளி வாகனங்களும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு:தனியார் பள்ளி மாணவ, -மாணவியரை சுமந்து செல்லும் பள்ளி வாகனங்கள், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வண்டும்.
வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். முழு தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த டிரைவர் மற்றும் நடத்துனர் பணியில் இருக்க வேண்டும்.
டிரைவர் விடுப்பில் செல்லும்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர் அல்லது தகுதியற்ற கிளீனர் போன்றவரை, வாகனம் ஓட்ட அனுமதிக்கக்கூடாது.
பள்ளி வாகனத்தை இயக்கி கொண்டே மொபைல்போனில் பேசுவது, தண்ணீர் அருந்துவது, மாணவ, மாணவியர் மற்றும் கிளீனர் போன்றோருடன் பேசுவது, பாடல்கள் கேட்பது போன்ற, கவனத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபடக் கூடாது.பள்ளி வாகனத்தை போக்குவரத்து விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இயக்கினால், புகார்களை தெரிவிக்க, பள்ளி முதல்வர் அல்லது நிர்வாக அலுவலர் மொபைல்போன் எண்ணை, வாகனத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும்.பாலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளின் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக