கோவை: தமிழக அரசின் நலத்திட்ட பொருட்களை, பள்ளிகளில் வைப்பதால் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அரசு லேப்-டாப், சைக்கிள், வண்ண பென்சில், அட்லஸ் உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்ட பொருட்களை, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் வழங்கிவருகிறது. அதே போல், பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில், சைக்கிள், லேப்-டாப் ஆகியவை கிடைத்தவுடன் வழங்காமல், அரசியல் தலைவர்கள் விழா எடுத்து வினியோகிக்கும் வரை, பள்ளி வகுப்பறைகளில் வைக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கவேண்டிய, லேப்-டாப், சைக்கிள் ஆகியவற்றை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கும் சூழலில், மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுவதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது.ராஜவீதி, ஒண்டிபுதுார் ஆண்கள் போன்ற அரசு பள்ளிகளில் போதிய இடவசதி இருப்பதால் வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சில மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் இடவசதிகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமரவேண்டி உள்ளதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் நலச்சங்க உறுப்பினர் மோகன் கூறுகையில், ''அரசு பள்ளிகளில் இடமுள்ளது என்பதற்காக, வகுப்பறைகளை குடோன் போல், பொருட்களை அடைத்துவைப்பது சரியல்ல. சில பள்ளிகளில் இடமில்லாமல் மாணவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நலத்திட்ட பொருட்கள், சைக்கிள், லேப்-டாப்பாக இருந்தாலும், மிக்சி, கிரைண்டராக இருந்தாலும் கிடைத்தவுடன் வினியோகிக்கவேண்டும்,'' என்றார்.

0 comments:
கருத்துரையிடுக