சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் சமர்ப்பிப்பதில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மற்றும் தொழில்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த. சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருமானச் சான்றினைப் பொருத்தமட்டில் பெற்றோர், பாதுகாவலரின் அரசின் வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும் வருமானச் சான்றிதழை மட்டுமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தளர்வு செய்து முந்தைய ஆண்டுகளில் வழங்கியதைப்போல் பெற்றோர், பாதுகாவலர் அவர் தம் வருமானத்தை குறித்து சுயசான்று அளித்தால் போதுமானது என ஆணை பிறப்பித்துள்ளது.
அதேபோல் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க சமர்ப்பிக்கும் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியலை சுயசான்றொப்பம் செய்து சமர்ப்பித்தாலே போதுமானது எனவும் மைய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறுபான்மையின மாணவர்,மாணவிகள் மேற்குறிப்பிட்ட வழிமுறையினைப் பின்பற்றி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

0 comments:
கருத்துரையிடுக