குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வசதியாக 29 ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு குறைகளைக் கேட்க முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கச் செயலர் கனகராஜ், தலைவர் கண்ணன், பொருளாளர் ஜான்பெனடி மற்றும் பொறுப்பாளர்கள் இருதயதாசன், சி.எஸ்.சேவியர்,ஜெறோம் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாரை தனியார் பள்ளி ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து, உதவிபெறும் பள்ளிகளில் தீர்வு காணப்படவேண்டிய பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வால் உருவாகியுள்ள பாதிப்புகளைப் போக்குதல்,பணியிட நிர்ணய ஆணை வெளியிட விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நடைபெற்றுள்ள நியமனங்களுக்கு தடையின்மைச் சான்றிதழ்,இடமாறுதல்,பதவி உயர்வு மற்றும் நியமன ஏற்பளிப்புகளை விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியரல்லாத பணியாளர் நியமன ஏற்பளிப்புகளில் ஏற்படும் வீண் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகாண முதன்மை கல்வி அலுவலரின் உடனிருப்பில் கல்வி அலுவலர்கள்,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் இணைந்த கூட்டு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
செப்.26,28 ஆகிய தேதிகளில் குழித்துறை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும் 29,30 தேதிகளில் தக்கலை கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும், அக்.1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை இக் கூட்டு அமர்வு நடைபெறும் என மாவட்ட கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் கூட்டு அமர்வில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

0 comments:
கருத்துரையிடுக