சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு, 'சீட்' கிடைத்தும், வசதியில்லாததால், கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராமு; மணவறை அலங்காரம் செய்யும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா. இவர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளான மோகன பிரியா, மோகன பிரீத்தி ஆகியோர், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,073 மற்றும் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மோகன பிரீத்திக்கு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்துள்ளது. மோகன பிரியாவுக்கு, சத்தியமங்கலம் பன்னாரியம்மன் பொறியியல் கல்லுாரியில், பி.டெக்.,- ஐ.டி., பிரிவில், 'சீட்' கிடைத்துள்ளது. ஆனால், கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால், மகள்களை கல்லுாரிக்கு அனுப்ப முடியாமல், ராமு தவித்து வருகிறார்.
தந்தை ராமு கூறியதாவது:நானும், என் மனைவியும், பிளஸ் 2வை தாண்டவில்லை; இதனால், மணவறை அலங்கார பணிகள், பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றுக்கு கூலியாளாக சென்று வருகிறேன். படிக்காததால், எனக்கு ஏற்பட்ட நிலைமை, என் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, அவர்களை முடிந்த வரை, படிக்க வைக்க வேண்டும், என்றார்.
மாணவியர் கூறுகையில், 'எங்களது தந்தையின் நிலைமை புரிந்தே நன்றாக படித்தோம். ஆனாலும், தற்போது கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தவிப்பதை பார்க்கும்போது, மிகவும் கஷ்டமாக உள்ளது' என்றனர்.மாணவியருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், ராமுவை, 97506 37041 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:
கருத்துரையிடுக