சேலம்: சேலம், பெரியபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், மூன்று வகுப்பறைகளில், அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறை, குடோனாக மாற்றப்பட்டதால், மாணவர்களுக்கான ஆய்வகம் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வறைகளில், பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில், வார்டு வாரியாக, பொதுமக்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மாநகரில், 70 சதவீதம் வரை விலையில்லா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, 5வது வார்டில், மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், மிக்ஸி, கிரைண்டர் வழங்கவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 5வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு, விலையில்லா பொருட்களை வினியோகம் செய்வதற்காக, மூன்று லோடு லாரி வந்தது. அதிலிருந்த, பொருட்கள், பெரியபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், மூன்று வகுப்பறைகளில், இறக்கி வைக்கப்பட்டது. மூன்று வகுப்பறைகளிலும் படித்த வந்த, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள், பள்ளியில் உள்ள ஆய்வகம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஓய்வறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரும்பலகை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி கூறியதாவது: பள்ளி வகுப்பறையில், விலையில்லா பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், மாற்று அறைகளில் அவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. அதனால், அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். வழக்கமாக விலையில்லா பொருட்கள், அந்தந்த வார்டில் உள்ள ஏதாவது ஒரு குடோனில் வைக்கப்படும். பள்ளி வகுப்பறையை குடோனை போல பயன்படுத்தியது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக