சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.குணநாதனுக்கு "ஆசிரியர் செம்மல்' விருதை வழங்குகிறார் நீதிபதி ஆர்.மகாதேவன். உடன் (இடமிருந்து) தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.பெரியண்ணன், ஆற்றுநர் பி.ரத்தினசபாபதி, தமிழ்நாடு மாநில ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.ராஜமோகன்.
மாணவர்கள் மனதில் லட்சிய விதையை ஆசிரியர்கள் ஊன்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை சார்பில் மாணவர்களின் மேம்பாடு, வளர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் செம்மல் விருது' வழங்கும் விழா சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மலேசியா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 83 ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் செம்மல்' விருதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கிப் பேசியதாவது: ஒரு சமுதாயத்தை கட்டமைப்பதிலும், இளம் பருவத்திலேயே மாணவர்கள் மனதில் லட்சிய விதையை ஊன்றுவதிலும் ஆசிரியர்கள் பங்களிப்பு இன்றியமையாதது. அறிவியல் துறையில் தான் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உதவியது என அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார். அவர் போன்ற பல சான்றோர்களையும், வியத்தகு சாதனையாளர்களையும் உருவாக்க ஆசிரியர்கள் தங்களைச் செதுக்கிக் கொள்கிறார்கள்.
குரு என்பவர் யார், அவரை எவ்வாறு மதித்துப் போற்ற வேண்டும் என்பது குறித்து வள்ளுவர் பல்வேறு குறள்கள் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார். "தெளிவான திட்டம் கொண்ட குருவின் வழிகாட்டுதல் இருந்தால் எத்தகைய இலக்குகளும் சாத்தியமே' என்று குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புகள் வாய்க்கப் பெற்ற ஆசிரியர்களைப் போற்றுவது என்பது சாதாரண நடைமுறையாக இல்லாமல் மனப்பூர்வமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் ஆசிரியர்களின் போதனைகளை மாணவர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக ராதாகிருஷ்ணன் சிலைக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக