உடுமலை: மாணவர்கள் பாதுகாப்பிற்காக, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு
குறித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், பொதுப்பணித்துறை (கட்டடம்) பிரிவு
மூலம் ஆய்வு நடத்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்தினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில், நுாற்றுக்கும்
மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பல அரசுப்பள்ளிகளில், சிதிலமடைந்த
வகுப்பறைகள், சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி வளாகம் என முக்கிய கட்டமைப்பு
வசதிகள் போதுமான அளவு மேம்படுத்தப்படாமல் உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால், பெதப்பம்பட்டி மற்றும்
பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்து கீழே
விழுந்துள்ளது. இச்சம்பவம் மற்ற பள்ளி நிர்வாத்தினரிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. .
இவ்வாறு சிதிலமடைந்த கட்டமைப்பு வசதிகளால், மழை காலத்தில் மாணவர்களின்
பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. துவக்கம் மற்றும்
நடுநிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பொதுப்பணித்துறை சார்பிலும், சுற்றுச்சுவர்
மற்றும் வகுப்பறைகள் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இப்பணிகளுக்கு அரசின் சார்பில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால்,
சிதிலமடைந்த சுற்றுச்சுவர்களை பராமரித்தல் மற்றும் சுவர் இல்லாத
பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற பணிகள், நீண்ட காலமாகவே
முடங்கியுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மழை காலத்தின் போதும்
கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது.
இதன்படி, பள்ளிகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பராமரிப்பில்லாத சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறை சுவர்கள் அதிக மழை
பெய்யும் காலத்தில் திடீரென இடிந்து விழுவதால், மாணவர்களை பள்ளிக்கு
வரச்சொல்வதற்கு நிர்வாகத்தினரும், பள்ளிக்கு அனுப்ப பெற்றோரும் தயங்க
வேண்டியுள்ளது. உயிரிழப்பு சம்பவங்கள் நிகழுவதற்கு முன்னர், பள்ளிகளின்
கட்டமைப்புகளை ஆய்வு செய்வதுடன், உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள
வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கு,
பொதுப்பணித்துறையின் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ந்து பள்ளிகளில் சுற்றுச்சுவர் இடிந்து
வருவதை உடனடியாக தவிர்க்கும் வகையில், பொதுப்பணித்துறை(கட்டடம்) பிரிவு
அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

0 comments:
கருத்துரையிடுக