5 வயதுக்கு மேற்பட்டோர் விபரங்கள் பதிவு: அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் 25க்குள் ஆதார் அட்டை !
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை எடுக்கப்பட வேண்டும், அதன் விபரங்கள் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ்
இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், நிதியுதவி பெறாத பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவுகளை கணினியில் மேற்கொள்ளும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டம் தோறும் ஆதார் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டது.

இதில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆதார் பதிவிற்கான மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாத அனைத்து மாணவர்களும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஆதார் அட்டை எண் பெறுவதற்கான மையங்களை அமைத்தல், விபரங்களை பதிவு செய்ய தேவையான நாட்களை வரையறுத்தல், பணி தடையில்லாமல் நடைபெற திட்டங்களை வகுத்தல் போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மாணவர்களின் ஆதார் எண் விபரங்கள் பதிவு செய்யும் மையங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீண்டும் முழு அளவில் தொடங்க உள்ளது.
இந்த மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை பொறுத்தவரையில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் விபரங்களை பதிவு செய்வதுடன் உதவி ெதாடக்க கல்வி அலுவலர்கள் இதற்கு பொறுப்பேற்று செயல்பட வேண்டும். செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுபட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் பெறப்படுவதுடன் இது தொடர்பாக நடைபெறும் பணிகளை தினசரி தொடக்க கல்வி இயக்ககத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக