காமராஜ் பல்கலையில் எல்லாமே இழுபறி : உயர்கல்வித்துறை மவுனம் கலையுமா
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் பொறுப்பேற்பு, 'செனட்' தேர்தல் அறிவிப்பு, புதிய துணைவேந்தர் தேர்வு என அனைத்தும் இழுபறியாகி நிர்வாகம் முடங்கி வருகிறது.
இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் ஒரு ஆண்டுக்கும் மேல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தர் தேர்வு குழுவில் இடம் பெற்ற 'செனட்' உறுப்பினர் ராமசாமி கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்ததால், புதிய துணைவேந்தர் தேர்விலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லை : பல்கலை நிர்வாகத்தை கவனிக்கும், 'பொறுப்பு' பதிவாளரான முத்து
மாணிக்கமும் 10 நாட்களுக்கு முன் ராஜினாமா கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் ஏற்கப்பட்டதா, இல்லையா என்பது மர்மமாக உள்ளது. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டால், அவருக்கு அடுத்த நிலையில் தகுதி அதிகாரியை அப்பொறுப்பில் நியமிக்க, உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.இதற்கிடையே 'செனட்' தேர்தல் அறிவிப்பிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், புதிய துணைவேந்தர் தேர்விலும் இழுபறி நீடிக்கிறது.
இதுகுறித்து பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: பல்கலை, 'மாலுமி இல்லாத கப்பல்' போல் தத்தளிக்கிறது. துணைவேந்தர் இல்லாதபட்சத்தில் பதிவாளர் (பொறுப்பு) பதவியை தகுதி உள்ளவருக்கு வழங்காமல் உயர்கல்வித்துறை மவுனமாக உள்ளது. 'செனட் உறுப்பினர் தேர்தலை நடத்த வேண்டும்' என பல்கலை சார்பில் உயர்கல்வியை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். ஆனால், பல்கலையில் அதிகாரிகள் இல்லாதததால், இதைப் பற்றி யோசிக்கவே பல நாட்கள் ஆகி விட்டன. சிலர், 'துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டால் நல்லது' என நினைக்கின்றனர். உயர் கல்வித்துறை மவுனம் கலைக்க வேண்டும்.
நினைவூட்டிய தேர்வுக் குழு : கடந்த பிப்ரவரியில் உறுப்பினர் ராமசாமி ராஜினாமா செய்தார். அதன்பின் 'பல்கலை செனட் தேர்தலை விரைவில் நடத்தி, புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும்' என கவர்னர், உயர்கல்வி செயலர், பதிவாளருக்கு, துணைவேந்தர் தேர்வுக் குழு சார்பில் இரண்டு முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும், 'இதுவரை அதற்கான பணிகள் நடக்கவில்லை' என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக