மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை அறிய முடியாமல், தேர்வு எழுதியவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர்கள் பதவிகளை நிரப்ப, ஜனவரியில் எழுத்துத்தேர்வு நடத்தியது. இதன் முடிவுகள் ஜூலை, 30ல், மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், அந்த முடிவை அறிந்து கொள்ள முடியாமல், தேர்வு எழுதியோர் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தேர்வு முடிவை அறிந்து கொள்ள, 'யூஸர் நேம் / பதிவு எண்' மற்றும், 'பாஸ்வேர்டு' பதிவு செய்யும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து, ஆறு மாதங்கள் கடந்ததால், பதிவு எண், பாஸ்வேர்டு தெரியவில்லை. இதனால், தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை அறிய முடியவில்லை. எனவே பெயர், பிறந்த தேதியை பதிவு செய்தால், தேர்வு முடிவை அறியும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தற்போது, தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும்தான் தெரிவிக்கப்படுகிறது. எத்தனை மதிப்பெண் எடுத்தால், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்வு சம்பந்தமாக முழு தீர்ப்பும் வெளியான பின், அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்படும்' என்றார்.

0 comments:
கருத்துரையிடுக