முதல்வர் இருக்கையில் முதல் முறையாக அமர்ந்த ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: முதல்வர் பதவிக்கு வந்த பின்னர் தமிழக சட்டசபையில் முதல்வருக்கான இருக்கையில் அமருவதைத் தவிர்த்து வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தின்போது முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பினாமி முதல்வர் என்றும் இன்னும் பல்வேறு பெயர்களாலும் தமிழக எதிர்க்கட்சியினர் ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சிக்கின்றனர். இருப்பினும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதைப் பொருட்படுத்துவதில்லை.
அவர் முதல்வர் பதவிக்கு வந்தது முதலே கோட்டையில் உள்ள முதல்வரின் அறைக்குப் போவதில்லை. அங்கு அமருவதில்லை. சட்டசபையிலும் முதல்வருக்கான இருக்கையில் அமருவதில்லை.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடியபோது அவர் முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா அமர்ந்திருந்த இரட்டை இருக்கையின் இன்னொரு பகுதியில் அமர்ந்திருந்தார். ஜெயலலிதா உட்கார்ந்திருந்த பகுதிக்கு அந்தப் பக்கமாக அவர் அமர்ந்திருந்தார்.
கடந்த முறை நடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது இந்த இருக்கையில் கூட ஓ.பன்னீர் செல்வம் அமரவில்லை என்பது நினைவிருக்கலாம். ஆனால் இன்று திடீரென இந்த இருக்கையில் பன்னீர் செல்வம் அமர என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதுவரை பன்னீர் செல்வம் அமர்ந்திருந்த இருக்கைக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மாறியுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக