வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தேர்வு முறைகேடு: மாணவர் - கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி; தண்டனைகளை கடுமையாக்கியது தேர்வு வாரியம்

தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் தண்டனைகளை கடுமையாக்கியுள்ள பாலிடெக்னிக் தேர்வு வாரியம், முறைகேடுகளுக்கு உதவிபுரியும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு, மூன்றாண்டு தடை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என, எச்சரித்துள்ளது. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் என, ௫௨௪ கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், தேர்வு நேரத்தில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களின் தேர்வு ரத்து, தகராறு செய்பவருக்கு மூன்றாண்டு தடை என, தேர்வு வாரியம் தண்டனைகளை கடுமையாக்கியுள்ளது. அதேபோல், தேர்வுகளில் மாணவர்களுக்கு உதவிபுரியும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை குறைப்பது, தேர்வு மையத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவும் வாரியம் முடிவுசெய்துள்ளது. இது குறித்து, பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு தேர்வு வாரியம் அனுப்பியுள்ள கடிதம்: தேர்வு அறையில் விடை அச்சிடப்பட்ட மற்றும் எழுதப்பட்ட தாள், புகைப்படத்துடன் பிடிபடும் மாணவர்கள் (எழுதுவதற்கு முன்), கடுமையாக எச்சரிக்கப்படுவர். விடைத்தாளில் அடித்தல் திருத்தம், பலவித கையெழுத்து, சூத்திரம் மற்றும் விடைகளை உடல் பாகங்கள், சுவர், டேபிள், உபகரணப் பெட்டி, வினாத்தாள், நுழைவுச் சீட்டு ஆகியவற்றில் எழுதிவைத்திருந்தாலும், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் அருகில் கடன் வாங்கினாலும், கடும் எச்சரிக்கை விடுக்கப்படும். முதல் எச்சரிக்கைக்கு பின்னரும், பிற மாணவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் உடனடியாக அறையிலிருந்து வெளியேற்றப்படுவர். விடைத்தாள் பரிமாறுதல், அருகில் பேசுதல், செய்கை செய்தல், அறை கண்காணிப்பாளரிடம் விவாதம் செய்பவர்களின் விடைத்தாள் பறிமுதல் செய்து, உடனடியாக வெளியேற்றப்படுவார். புத்தகத்திலிருந்து கிழித்துவரப்பட்ட விடை, மொபைல், பேஜர் உள்ளிட்டவை பயன்படுத்தினால் அன்றைய தேர்வு ரத்துசெய்யப்படும். விடைத்தாளில் பணம் வைப்பது, 'பிட்' உள்ளிட்டவற்றை வீசுவது, விசாரணைக்கு மறுப்பது, தடயங்களை அழித்தல், கண்காணிப்பாளரை கேலி செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டால், பருவத்தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும். மேலும், இரு பருவத் தேர்வுகள் வரை எழுதாது ரத்து செய்யப்படும்.வன்முறையில் ஈடுபடுதல், விடைத்தாளில் இழிவுபடுத்தும் மற்றும் தகாத வார்த்தைகள் பயன்படுத்துவோரின், பருவத் தேர்வு ரத்து செய்வதுடன், கல்லுாரியிலிருந்தும் நீக்கப்படுவர்; எதிர்வரும் தேர்வுகளும் எழுதமுடியாது.கண்காணிப்பாளரை தாக்குவது, தேர்வு ஆவணங்களை அழிக்க முயற்சித்தால், அனைத்து தேர்வுகளும் ரத்து செய்வதுடன், கல்லுாரியிலிருந்து நீக்கப்படுவர்; சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை: மாணவர்கள் வரிசை முறையில் மாற்றம் செய்பவர், விடை எழுத உதவி செய்பவர்கள், மூன்றாண்டு தேர்வு பணியில் ஈடுபட முடியாது; தவிர, தொடர்புடைய கல்லுாரி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். தவறான வினாத்தாள் வழங்குபவர்கள், மூன்றாண்டு தடை தவிர, விசாரணைக்கும் அழைக்கப்படுவர்.மேலும், பத்து சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.நுழைவு சீட்டு வழங்காதது, 'எக்ஸ்டர்னல்' இல்லாது செய்முறை தேர்வு நடத்துவது, ஒரே அறையில் இரு செய்முறை தேர்வு நடத்துவது, தேர்வு அட்டவணையை மாற்றுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கல்லுாரிகளில் தொடர்புடையவர்கள், மூன்றாண்டுகள் தடை செய்யப்படுவதுடன், கல்லுாரி மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இவ்வாறு, பல்வேறு கெடுபிடிகளை தேர்வு வாரியம் விதித்துள்ளது. வரும், ஏப்., மாதத்திலிருந்து இவற்றை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்