கடலூர் மாவட்டத்தில் 137 மாணவ, மாணவியர்கள் "ஸ்கிரைபர்' முறையில் தேர்வு எழுத உள்ளனர்
இன்று துவங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 137 மாணவ, மாணவியர்கள் "ஸ்கிரைபர்' முறையில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி முடிகிறது. இத்தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 249 பள்ளிகளைச் சேர்ந்த 27 ஆயிரத்து 120 மாணவ, மாணவியர்களும், தனித் தேர்வர்கள் 2,295 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 161 பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 812 மாணவ, மாணவியர்களும், தனித் தேர்வர்கள் 1,084 பேர் என மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 311 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
110 மையங்கள் இவர்களுக்காக கடலூர் கல்வி மாவட்டத்தில் 69 மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 41 மையங்கள் என மொத்தம் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் தலைமைக் கண்காணிப்பாளர் 110, துறை அலுவலர்கள் 110, அறை கண்காணிப்பாளர்கள் 2,200, பறக்கும் படை 300 பேர் என மொத்தம் 2,720 பேர் ஈடுபடுகின்றனர்.
137 பேர் "ஸ்கிரைபர்' முறையில் தேர்வு
தேர்வு எழுத உள்ளவர்களில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 100 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 37 பேர், உடல் நிலை பாதிப்பு காரணமாக சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் "ஸ்கிரைபர்' பயன்படுத்தி தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 137 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் கூறும் பதில்களை எழுதி கொடுப்பார்கள். மாணவர் பதில் கூறி, ஆசிரியர் எழுத வேண்டும் என்பதால் இவர்களுக்கு மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு காலை 9:15 மணிக்கு தேர்வு துவங்குகிறது. 9:25 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்த பின் 9:30 மணிக்கு துவங்கி, 12 மணிக்கு தேர்வு எழுதி முடிக்க வேண்டும். "ஸ்கிரைபர்' மூலம் தேர்வு எழுதுபவர்கள் பகல் 1:00 மணிக்கு தேர்வை முடிக்க வேண்டும்.
சிறை கைதிகள் பங்கேற்பு
கடலூர் மத்திய சிறையில் உள்ள 380 தண்டனை கைதிகளில் 14 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மனோ, தமிழ்செல்வன், சங்கர், சசிக்குமார், கதிரவன், குமார், கருப்பையா, ஆர்.சங்கர், உதயகுமார், சம்பத், ஜோதி, அழகர், கோவிந்தராஜ் ஆகிய 13 பேர் சிறையில் உள்ள மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரியில் படித்து தேர்வு எழுதுகின்றனர். பிக்காராம் என்பவர் ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்த ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத உள்ளார். இவர்கள் அனைவருக்கும், சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி கடலூர், மத்திய சிறையில் இருந்து 14 பேரும் நேற்று முன்தினம் மாலையே போலீஸ் பாதுகாப்புடன் சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். தேர்வு முடிந்ததும் மீண்டும், கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுவர். இதே கடலூர் மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளில் 4 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக