சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் 7-வது நாள் போராட்டமாக, அரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி சென்னையில் திங்கள்கிழமை முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.சேப்பாக்கத்தில் 7 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இவர்கள் உடல்நிலை மோசமானதால், போலீசார் வியாழக்கிழமை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்நிலையில் 7-வது நாள் போராட்டமாக பார்வையற்ற பட்டதாரிகள், அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

0 comments:
கருத்துரையிடுக