தகுதித் தேர்வு முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என பார்வையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் செ. அசோக்குமார் வெளியிட்ட செய்தி:
உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான "நெட்', "செட்' தேர்வுகளை முடித்து நீண்ட நாள்களாகக் காத்திருக்கும் 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு நேர்காணல் மூலம் உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குரூப் ஏ, குரூப் பி பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இதுவரை எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திங்கள்கிழமை (மார்ச் 9) முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக