வேலூர்:வேலூரில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ""உயர் கல்வியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது,'' என, அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக, 10வது பட்டமளிப்பு விழா, காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரியில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா, 45 ஆயிரத்து, 16 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் பங்கேற்ற, அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:தமிழகத்தில், 7.20 கோடி பேர் உள்ளனர். இதில், 18 வயதில் இருந்து, 23 வயது வரை உள்ளவர்கள், 11 சதவீதம் பேர். இவர்கள், பள்ளி படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர வசதியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வந்த பின், 53 புது கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சி, 20 சதவீதம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி வளர்ச்சி, 42.8 சதவீதம் உள்ளது. ஆந்திராவில், 27.6, கர்நாடகாவில், 24, கேரளாவில், 23, குஜராத்தில், 17, உத்தரபிரதேசத்தில், 16.8 சதவீதம் உள்ளது. உலக அளவில், 233 நாடுகளில், 53 சதவீதம் உயர் கல்வி வளர்ச்சி உள்ளது. வளர்ந்த நாடுகளை விட, தமிழகத்தில் உயர் கல்வி அதிகளவு வளர்ச்சி அடைந்ததற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களே காரணம்.
இந்தியா விடுதலையான போது, 20 பல்கலைக்கழகங்கள் இருந்தது. 2014ல் 694 உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 53 பல்கலைக்கழகங்கள் உள்ளது. 1950ம் ஆண்டு இந்தியாவில், 500 கல்லூரிகள் இருந்தது. 2014ல், 37 ஆயிரத்து 204 கல்லூரிகள் உள்ளது. தமிழகத்தில், 3,448 கல்லூரிகள் உள்ளது. இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் நாட்டின் வளர்ச்சி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் நந்தகோபால், இந்திய விலங்கின கணக்கெடுப்பு நிறுவன இயக்குனர் வெங்கடராமன், பல்கலைக்கழக துணைவேந்தர் குணசேகரன், பதிவாளர் ஜெயகுமார், மேயர் கார்த்தியாயினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ரோசய்யாவை, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன், துணைத் தலைவர்கள் செல்வம், சேகர் விசுவநாதன், சங்கர் விசுவநாதன், கலெக்டர் நந்தகோபால், எஸ்.பி., செந்தில்குமாரி ஆகியோர் வரவேற்றனர்.

0 comments:
கருத்துரையிடுக