பள்ளி வகுப்பறையில் மாணவன் பலி; அவிநாசியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி
அவிநாசி : அவிநாசி, ஆரம்பப்பள்ளியில், முதல் வகுப்பு மாணவன், திடீரென்று மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அவிநாசி, முத்துச்செட்டிபாளையம், தாமஸ் காம்பவுண்ட் வீதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ், 33. இவருக்கு கலாமணி, 26, என்ற மனைவி, நவநீதகிருஷ்ணன், 6, ஜோஸ், 4, என, இரு மகன்கள். மூத்த மகன் நவநீதகிருஷ்ணன், அதே பகுதியில், புனித தோமையர் ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தான். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுவன், முற்பகல், 11:30 மணிக்கு, வகுப்பறையில் திடீரென்று கை, கால்களை இழுத்தவாறு, கீழே விழுந்தான். ஆசிரியைகள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு துாக்கிச்சென்றனர்.அங்கு முதலுதவி அளித்தபின், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே நவநீதகிருஷ்ணன் இறந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்டு, பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக சிறுவன் உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதன்மைக்கல்வி அலுவலர் முருகன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜாமணி இருவரும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகளிடம் விசாரித்தனர். அதில், ஸ்கெட்ச் பேனா மூடியை வாயில் வைத்து ஊதிக்கொண்டிருந்த நவநீதகிருஷ்ணன், திடீரென்று அதை விழுங்கியதாகவும், அதனால் மூச்சு அடைத்து இறந்ததும், தெரியவந்தது.'பிரேத பரிசோதனை முடிவில், இறப்புக்கான காரணம் தெரியவரும்' என்று, விசாரித்து வரும் அவிநாசி போலீசார் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக