திங்கள், 9 மார்ச், 2015

ஆசிரியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களுக்கு நன்றி


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு பள்ளிஆசிரியர்களின் இந்த கோரிக்கைகள் நியாயமானவை; நிறைவேற்றப்பட வேண்டியவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏழை- எளிய மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டதோ, அதேபோல், அரசு ஊழியர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில் முதன்மையானது ஓய்வூதியம் பெரும் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு அவர்களின் கடைசி வாழ்நாள் வரை ஓய்வூதியமும், அவருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைத் துணைக்கும் சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே தெரியவில்லை. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின் இதுவரையில் அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே தெரியவில்லை.

ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் சலுகை அல்ல... அரசு ஊழியர்களின் உரிமை ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு ஊழியர்களுக்கு எந்த தேதியில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். ஆனால், அரசு அறிமுகம் செய்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது சாத்தியமில்லை. அரசு ஊழியர் ஓய்வுபெறும் போது அவரது கணக்கில் உள்ள பணத்தில் 60% மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள 40% பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால் அந்த பணம் திரும்பக் கிடைக்குமா? என்பதற்குக் கூட உத்தரவாதம் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இதனால் ஓய்வுக்குப் பின் அரசு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது.

அதேபோல், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டும் போது, அகவிலைப்படியில் 50 விழுக்காடு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவது மரபாக உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 113% என்ற அளவை எட்டி விட்ட பிறகும் அதில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க மத்திய, மாநில அரசுகள் தயங்குவது சரியல்ல. நியாயமான இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் ரூ.10,000 அடிப்படை ஊதியம் பெறும் ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.50 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் தற்போது பணியிலிருக்கும் பட்டதாரி ஆசிரியர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2004 ஆம் ஆண்டில் ரூ.4000 என்ற மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு, அதன் பின் இரு ஆண்டுகள் கழித்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக கருத்தில் கொள்ள அரசு மறுப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

எனவே, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்