மீஞ்சூர்: நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மீஞ்சூர், அரியன்வாயல் பகுதியில் உள்ள, ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதை உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த 2012ம் ஆண்டு முதல், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பள்ளி மாணவர்கள், உயர்நிலைக் கல்வி பயில, ரயில்வே இருப்புப் பாதையை கடந்து, மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இருப்புப் பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளதால், மாணவர்களை உயர்கல்வி படிக்க, அனுப்புவதற்கு, அவர்களது பெற்றோர் அச்சப்படுகின்றனர். திருவெள்ளவாயல் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியும், 7 கி.மீ., தொலைவில் உள்ளது. போதிய பேருந்து போக்குவரத்து இல்லாததால், அங்கு சென்று படிக்கவும் முடிவதில்லை.
இதனால், நடுநிலைப் பள்ளி படிப்புடன் மாணவர்களின் கல்வி எதிர்காலம் முடங்கி வருகிறது. இந்த கல்வியாண்டிலாவது, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின், சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், மேற்கண்ட பள்ளி வளாகத்தில், உயர்நிலைப் பள்ளி அமைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. பேரூராட்சி சார்பில், பள்ளி அருகில் விளையாட்டு திடல் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர்.
சிறுபான்மையின இஸ்லாமியர்கள், நரிக்குறவர்கள் அதிகம் இப்பள்ளியில் படிப்பதால், பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக