தமிழகம்
ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம் சிபிஐ விசாரணை கோரி வழக்கு
பதிவு செய்த நேரம்:2015-03-17 00:56:11
மதுரை: ஆசிரியர் இடமாறுதலில் நிலவும் லஞ்சம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த லின்னெட் அமலா சாந்தகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள திருநெல்லிகாவல் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கடந்த 22.3.2007ல் டிஆர்பி மூலம் நியமிக்கப்பட்டேன். அதற்கு முன்பே எம்பில் தகுதி பெற்றிருந்தேன். ஆனால் என்னைவிட குறைந்த தகுதி பெற்ற பலர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இதனால் எனக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றம் செய்ய வேண்டி கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதற்கு துவக்க கல்வி இயக்குநரின் தடையின்மை சான்று பெற வேண்டும் என கூறினர். ஆனால் ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் நியமனங்களில் அரசியல்வாதிகள் தலையீடால் முறைகேடு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்களின் விபரங்கள் முறையாக வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் வெளியிடப்படாததால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வெளிப்படைத் தன்மை இருக்கும் விதமாக காலி பணியிடங்களின் விபரத்தை அரசு இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடவும், அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக லஞ்சம் மற்றும் ஊழல் நிலவுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். எனக்கு தூத்துக்குடி மாவட்ட பகுதியில் மாறுதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, மனு குறித்து பள்ளி கல்வித்துறை செயலர், துவக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

0 comments:
கருத்துரையிடுக