தமிழகம்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18ம் தேதி தீக்குளிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் பரபரப்பு பேட்டி
பதிவு செய்த நேரம்:2015-03-16 20:02:56
மார்த்தாண்டம்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க குமரி மாவட்ட பொதுச்செயலா ளர் ஜெபர்சன், தலைவர் தாணுபிள்ளை, பொருளாளர் ரமணி, துணைத்தலைவர் இன்பராஜ் ஆகியோர் மார்த்தாண்டத்தில் அளித்த பேட்டி: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 150 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும். சிறப்பு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அரசு ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்களும் எங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்களைப் போன்ற பார்வையற்றவர்கள் பல்வேறு சிரமங்களுடன் பட்டப் படிப்புகளை முடித்துள்ளோம்.
ஆனால், அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடு பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பார்வையற்றோர் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தினோம். ஆனால் பார்வையற்றவர்கள் என்பதை கூட பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மிருகத்தனமாக தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி வாகனங்களில் ஏற்றி சுடுகாட்டில் கொண்டு இறக்கி விட்டனர். பின்னர் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் எந்த உறுதிமொழியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது சென்னையில் நடக்கும் போராட்டத்தை தொடரவிடாமல் அரசு பேச்சுவாத்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விரைந்து உறுதியான நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கு பணி வழங்காவிட்டால் வரும் 18ம் தேதி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சங்கம் சார்பில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments:
கருத்துரையிடுக