சனி, 14 மார்ச், 2015

பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி: பி.எப். சந்தா தொகை உயருகிறது மத்திய அரசின் புதிய மசோதா தயார்


பணியாளர்களிடம் பிடிக்கப்படும் பி.எப். சந்தா தொகையை உயர்த்தும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.

பி.எப்.
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களிடம் பி.எப். எனப்படும் சேமநல நிதி பிடிக்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில்தான் தற்போது பி.எப். சந்தா தொகை கணக்கிடப்படுகிறது.

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு இருந்தாலும், அதை 15 ஆயிரம் ரூபாய் என உச்சவரம்பாக கொண்டு, அதில் 12 சதவீத தொகை பி.எப். சந்தா தொகையாக பிடிக்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களிடம் 12 சதவீத தொகையான ரூ.1,800, பி.எப். சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இதே அளவு தொகையை அவர் பணிபுரியும் தொழில் நிறுவனமும் செலுத்தி வருகிறது.
ஓய்வூதியம்
ஊழியர்களிடம் பிடிக்கப்படும் 12 சதவீத தொகையில், 3.67 சதவீத தொகை சேமநல நிதிக்கும், 8.33 சதவீத தொகை அவர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கும் செல்கிறது. இதுதவிர, 0.5 சதவீத தொகை, காப்பீட்டு திட்டத்துடன் இணைந்த வைப்புத்தொகையில் செலுத்தப்படுகிறது.

புதிய மசோதா
இந்நிலையில், பி.எப். சந்தா தொகையை அதிகரிக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம், புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. பணியாளர்கள் சேமநல நிதி சட்டம்–1952–ல் திருத்தம் செய்து, இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மசோதா, ‘சம்பளம்’ என்பதற்கு புதிய அர்த்தத்தை உருவாக்கி உள்ளது. அதாவது, அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் சம்பளமாக கருதப்படும். எனவே, தற்போது, பி.எப். சந்தா தொகைக்காக கணக்கிடப்படும் ரூ.15 ஆயிரம் உச்சவரம்பு தொகை அதிகரிக்கும். அதில் 12 சதவீதத்தை கணக்கிடும்போது, பி.எப். சந்தா தொகையும் உயரும். தொழில் நிறுவனங்களும் அதே அளவு தொகையை செலுத்துவதால், பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதுகுறித்து பாரதீய மஸ்தூர் சங்க பொதுச்செயலாளரும், இ.பி.எப். அமைப்பின் அறங்காவலருமான விர்ஜேஷ் உபாத்யாயா கூறுகையில், ‘தொழில் நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய பி.எப். பங்கை குறைப்பதற்காக, சம்பளத்தை பல்வேறு படிகளாக பிரித்து விடுகின்றன. இந்த மசோதாவின் மூலம், அந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என்றார்.

முத்தரப்பு பேச்சு
இந்த மசோதா தொடர்பாக, தொழில் நிறுவனங்கள், ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், அரசு தரப்பு ஆகியவை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. எனவே, மசோதாவுக்கு இறுதி வடிவம் அளிக்கும் பணியில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

அனைத்து படிகளையும் சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதமே இ.பி.எப். அமைப்பு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பால், அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியும், அனைத்து படிகளையும் சம்பளத்துடன் இணைக்க சிபாரிசு செய்தது.
இந்த பின்னணியில், மத்திய அரசின் புதிய மசோதா தயாராகி உள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்