விஷம் வைப்போம் என ஊழியர்கள் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகாரளித்த மாணவர்கள்
விஷம் வைப்போம் என ஊழியர்கள் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகாரளித்த மாணவர்கள்
சிவகங்கை: விடுதி மாணவர்களுக்கான உணவில், விஷம் வைப்போம் என ஊழியர்கள் மிரட்டுவதாக, கலெக்டரிடம், மாணவர்கள் புகார் கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆதிதிராவிடர் கல்லூரி விடுதி மாணவர்கள், கலெக்டர் முனுசாமியிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்த விடுதியில், 67 பேர் தங்கி படிக்கிறோம். இங்குள்ள மாணவர்களை, விடுதி காப்பாளர், சமையலர்கள் கொடுமைப்படுத்துகின்றனர். விடுதிக்குள், மது, சிகரெட் குடிப்பதை தட்டிக்கேட்டால் சாப்பாட்டில் விஷத்தை கலந்திடுவோம் என, மிரட்டுகின்றனர்.
எவ்வித முன் அறிவிப்பின்றி விடுதியை மூடுகின்றனர். விடுதியிலுள்ள அரிசியை கடத்துகின்றனர். இதை தட்டிக் கேட்டால் விடுதியை விட்டே நீக்கிடுவோம் என மிரட்டுகின்றனர். விடுதி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை உள்ளது. இதுபோன்ற, பல பிரச்னைகள் குறித்து நடவடிக்கை இல்லையெனில், மாணவர்கள் தங்கி படிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, புகாரில் மாணவர்கள் கூறி உள்ளனர்.
வார்டன் சந்திரன் கூறியதாவது: மாணவர்கள் சிலர், போதையில் வரும்போது அவர்களை கண்டித்துள்ளோம்; இதற்கு ஆதாரம் உள்ளது. அவர்களை கண்டிப்பதால் கலெக்டரிடம் புகார் செய்கின்றனர்.
தேர்வு எழுதி சென்றவர்களும், சஸ்பெண்ட் ஆன சிலரும், விடுதிக்குள் வந்து, பிற மாணவர்களை கெடுக்கின்றனர். வேலையை காப்பாற்றிக்கொள்ள நாங்களும் பக்குவமாக செயல்படுகிறோம். எனக்கு தெரிந்து, உணவில் விஷம் எனும் வார்த்தையை சமையலர்கள் கூறவில்லை. வேண்டுமென்றே மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக