இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது. மேலும், எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டைப் போன்றே ஏராளமானோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
புதன்கிழமை மாலை வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும்.
விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (மே 14) முடிவடைகிறது. கடந்த ஆண்டில் 87 ஆயிரம் பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதே அளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக