உதவி பொறியாளர் தேர்வில், அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., பின்பற்றிய நடைமுறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்கான உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் மட்டுமே வெளியிடப்பட்டது. நேர்முகத் தேர்வு முடிந்த பின், 80 பேர் அடங்கிய தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது, 80 பேரின் மதிப்பெண் வெளியிடப்பட்டது. உதவி பொறியாளர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை; கீ விடைத்தாள் மற்றும் பெற்ற மதிப்பெண்களை வெளியிட வேண்டும்; பணியில் நியமிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜய் கீர்த்தி, தமிழரசி ஆகியோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள், எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவி பொறியாளர் தேர்வில், டி.என்.பி.எஸ்.சி., பின்பற்றிய முறையில், இந்த நீதிமன்றம் அதிருப்தி அடைகிறது. குரூப் - 4 தேர்வு எழுதியவர்கள், அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
அவர்களின் மதிப்பெண்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடுகிறது. ஆனால், உதவி பொறியாளர் தேர்வில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் வெளியிடாதது ஆச்சரியமளிக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதற்கு முன், எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட வேண்டும். அப்போது, தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். தேர்வர்களும், நீதிமன்றத்தின் கதவை தட்ட மாட்டார்கள்.

0 comments:
கருத்துரையிடுக