ஆந்திர மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை முழங்காலிட வைத்து தண்டித்ததால் 10 வயது மாணவி பரிதாபமாக பலியானதையடுத்து அந்தப் பள்ளியை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஹுஸுராபாத் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த கோலிப்பாக்கா ஆஷிர்தா(10) என்ற அந்த சிறுமி கணக்கு வீட்டுப்பாடங்களை செய்யத் தவறியதால் கடந்த 16-ம் தேதி கணக்கு ஆசிரியை அவளை வகுப்பறையில் முழங்காலிட வைத்துள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரமாக முழங்காலிட்ட அந்த சிறுமியின் கால் பகுதிக்கு செல்ல வேண்டிய ரத்த சுழற்சி தடைபட்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட ஆஷிர்தாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மயக்கம் தெளியச் செய்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த அவரது பெற்றோர், இரு கால்களும் வீங்கிய நிலையில் தவித்த மகளை கடந்த 17-ம் தேதி ஹுஸுராபாத் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததால் வாரங்கல்லில் உள்ள வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆஷிர்தாவின் கால்களில் தடையில்லா ரத்த சுழற்சி நடைபெற சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவளது உடல்நிலை நேற்று மீண்டும் மோசம் அடைந்தது. வலிப்புடன் வாயில் நுரை தள்ளிய நிலையில் நேற்று அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்தவுடன் ஆஷிர்தாவின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவளது பிரேதத்தை அந்த தனியார் பள்ளியின் வாசலில் கிடத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்துக்கு காரணமான ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டக்காரர்களில் சிலர் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து, உடைத்து சூறையாடினர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள குழந்தைகள் உரிமை அமைப்பினர், அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக