சென்னை: கடந்த ஜூன்8ம் தேதி மாயமான டார்னியர் விமானம், 33 நாட்களுக்கு பின்னர், கடலூர் பிச்சாவரத்திலிருந்து 16.5 மைல் கடல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதியில், கடலோர காவல் படையின் விமான தளம் உள்ளது. இந்த தளத்தில் இருந்து, ஜூன்8ம் தேதி மாலை, 6:05 மணிக்கு பைலட் வித்யா சாகர் தலைமையில், துணை பைலட் சோனி மற்றும் கண்காணிப்பாளர் சுபாஷ் சுரேஷ் ஆகியோர், ரோந்து பணிக்காக 'டார்னியர்' சி.ஜி., 791 ரக விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விமானம், பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி வரும் போது, இரவு, 9:23 மணிக்கு விமான கட்டுப்பாட்டு அறையுடனா தகவல் தொடர்பை இழந்தது.
இதையடுத்து, கடலோர காவல் படை மற்றும் கடற்படைக்குச் சொந்தமான, எட்டு கப்பல்கள் மற்றும் அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் உள்ள விமானங்கள் மூலம் மாயமான கடலோர காவல் படை விமானத்தை தேடும் பணி நடந்தது. கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலமும் மாயமான விமானத்தை தேடும் பணி நடந்தது. ஆனால், விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், மாயமான டார்னியர் விமானம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பிச்சாவரத்திலிருந்து 16.5 மைல் கடல் தூரத்தில் விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி கடலுக்கு அடியில் 950 மீட்டர் அழத்தில் இருந்துள்ளது..
டார்னியர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஒலிம்பிக் கேன்யன், ஐ.என்.எஸ்., சிந்துவாஜ் கப்பல்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம், விபத்திற்கான காரணம் தெரிய வரும்.


0 comments:
கருத்துரையிடுக