காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமத்தில் கடந்த 1969ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி துவங்கும்போது ஓடுகளால் கூரை அமைத்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. செவிலிமேடு பேரூராட்சியாக இருந்தபோது, இந்த பள்ளிக்கு அதே வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என அப்போதைய தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். 20 ஆண்டுகள் கடந்தும், இது வரை இந்த கட்டிடம் அகற்றப்படாமல் அபாய நிலையில் உள்ளது.
விளையாட்டு வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், பழுதடைந்த கட்டிடத்தின் தூண்களை பிடித்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது போன்ற நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், இதனை அகற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இதேபோல் இந்த வளாகத்தில் அங்கன்வாடி கட்டிடம், பழுதடைந்த நிலையில் பூட்டியே கிடக்கிறது. இந்த கட்டிடத்தையும் அகற்றிவிட்டு, பள்ளி விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக